Monday, 19 December 2011

மச்சான்




"2008ம் ஆண்டு வெளியான மச்சான் (Machan) என்ற சிங்களத் திரைப்படம் ஒன்றினை சமீபத்தில் பார்த்தேன், சென்னை திரைப்பட விழா, திருவனந்தபுரம் திரைப்பட விழா இரண்டிலும் இப்படம் மிகுந்த வரவேற்பு பெற்றது என்று ஒரு நண்பர் சொல்லி படத்தைக் காணும்படியாக தந்திருந்தார்,
மச்சான் திரைப்படத்தின் தயாரிப்பாளர் Death on a full Moon Day போன்ற சிறந்த சிங்களப் படங்களை இயக்கிய பிரசன்ன விதநாயகே, படத்தின் இயக்குனர் இத்தாலியை சேர்ந்த உபர்ட்டோ பசோலினி, படத்தயாரிப்பில் ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு சேனல்கள் பங்குபெற்றுள்ளன, பன்னாட்டு கூட்டுத்தயாரிப்பில் வெளியான இப்படம் வெனிஸ் திரைப்படவிழா உள்ளிட்ட 11 உலகதிரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு முக்கியப் பரிசுகளை வென்றிருக்கிறது,
சமகால சிங்களத்திரைப்படங்களில் சங்கரா. Death on a full Moon Day போன்ற சில படங்களை திரைப்பட விழாக்களில் பார்த்திருக்கிறேன், மச்சான் இந்தப் படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்று,
லகான் படம் எப்படி இந்திய சினிமாவில் புதிய அடையாளத்தை உருவாக்கியதோ அதற்கு நிகரான ஒரு முயற்சியாகவே இத்திரைப்படத்தை நினைக்கிறேன், கூடுதலாக லகானை விடவும் இது கேலியும் கிண்டலும் நிறைந்த விளையாட்டைப் பிரதான கதைக்களமாக கொண்ட படம், நீண்ட நாட்களுக்குப் பிறகு அசலான நகைச்சுவை காட்சிகளுடன் வாய்விட்டு சிரித்து மகிழக்கூடிய படம், மனம்விட்டு சிரிக்கும் அதே நேரம் பிழைப்பிற்காக  தேசம்விட்டு தேசம் ஒடுதல் எவ்வளவு துயரமானது என்பதையும் உணர்ச்சிபூர்வமாகச் சொல்லியிருக்கிறது இப்படம்
ஒரு உண்மை சம்பவத்தை மையமாக்க் கொண்டு படம் உருவாக்கபட்டிருக்கிறது, படத்தின் துவக்க காட்சியிலே படம் எப்படிபட்டது என்று புரிந்துவிடுகிறது, நடுஇரவில் இரண்டு பேர் போஸ்டர் ஒட்டப் போகிறார்கள், அதில் ஒருவன் காலில் நாய் மூத்திரம் பெய்துவிடுகிறது, உடனே மற்றவன் மச்சான், நாய் உன்மேல் மூத்திரம் பெய்தால் நல்ல சகுனம் ,  நீ கட்டாயம் வெளிநாடு போய்விடுவாய், அதனால் நாய் மூத்திரத்தை சுத்தபடுத்திவிடாதே என்று சொல்கிறான், அது நிஜமாக இருக்குமோ என்று மற்றவன் ஒரு நிமிசம் யோசித்து மூத்திரத்தை சுத்தபடுத்தவா வேண்டாமா என்று தயங்கி யோசிக்கிறான்,
வெளிநாட்டிற்குப் போய்விட வேண்டும், அதற்கு காலில் நாய்மூத்திரம் பெய்தால் கூட பரவாயில்லை என்று நினைக்கும் மனநிலையே படத்தின் ஆதார தொனி,
மனோஜ் . ஸ்டான்லி என்ற இரண்டு இளைஞர் இலங்கையில் இருந்து எப்படியாவது ஜெர்மன் போய் சம்பாதித்துவிட வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள், இருவருமே அடித்தட்டைச் சேர்ந்தவர், ஒருவன் மதுபரிசாரகனாகவும் மற்றவன் பழம்விற்பனை செய்பவனுமாக இருக்கிறான், அவர்களுக்கு முறையான எந்த தகுதியும் இல்லை என்று ஜெர்மன் விசா நிராகரிக்கபடுகிறது,
விசா வாங்குவதற்காக வீட்டில் இருந்து அவர்கள் தயாராகி ஜெர்மன் தூதகரம் செல்லும் காட்சியில் அவனது நடை மற்றும் ஜெர்மன் சொற்களை பயன்படுத்தும் விதம், குடும்பமே அவன் ஜெர்மனிக்கு செல்வதைப் பற்றி கனவு காண்பது யாவும் மிகுந்த வேடிக்கையாக இருக்கிறது,
விசா மறுக்கபட்ட மனோஜ் எப்படி ஜெர்மன் போவது என்று நண்பர்களுடன் குடித்தபடியே கவலைப்படுகிறான், பலவிதமாக முயற்சிசெய்து பார்க்கிறான்,  இதற்கிடையில் கடன்நெருக்கடி அவர்களைத் துரத்துகிறது, ஒருநாள் ஜெர்மனியில் உலக அளவிலான ஹேண்ட் பால் போட்டி ஒன்று நடக்க இருக்கிறது என்ற செய்தியை அவர்கள் அறிகிறார்கள், இதைப் பயன்படுத்தி தாங்களாகவே ஒரு கைப்பந்துக் குழுவை உருவாக்கி அதன் பெயரில் ஜெர்மனிக்குள் தப்பியோடிப் போய்விட்டால் என்னவென்று திட்டமிடுகிறார்கள்,
அது நல்ல யோசனையாகத் தெரிகிறது, ஆனால் கைப்பந்து என்றால் என்னவென்றே அவர்களுக்குத் தெரியாது, முதலில் அதைப்பற்றி தெரிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள், போட்டி விதிகள் மற்றும் விளையாடும் முறைகளை அறிந்து விளையாடிப் பார்க்கிறார்கள், அது எளிதாக கற்றுக் கொண்டு விளையாடும் ஒன்றில்லை என்று நன்றாகவே தெரிகிறது, ஆனாலும் கைப்பந்துக் குழுவை உருவாக்கினால் மட்டுமே ஜெர்மனிக்கு ஒடிப் போக முடியும் என்பதால் அவர்கள் ஒரு குழுவை உருவாக்குகிறார்கள்
அதுதான் படத்தின் நகைச்சுவை சூடுபிடிக்கும் இடம், விளையாட்டு என்றால் என்னவென்றே தெரியாத ஆட்களைப் பிடித்து, வண்ண உடைகளை மாட்டி கைப்பந்து விளையாட்டின் பெயரில் எப்படி ஜெர்மனி போகப்போகிறோம் என்ற நாடகத்தை உருவாக்குகிறார்கள், இதில் ஒரு போலீஸ்காரன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள்,
இலங்கை தேசியக் கைப்பந்து குழு என்று அவர்களாக தங்கள் குழுவிற்கு பெயர் சூட்டிக் கொண்டு குரூப் போட்டோ  எடுத்து அனுப்புகிறார்கள், அந்தக் குழு ஜெர்மனியில் நடைபெற உள்ள விளையாட்டுப் போட்டிக்கு தேர்வாகிறது, இப்போது அடுத்த சோதனை துவங்குகிறது
கைப்பந்து குழுவை அங்கீகரித்து இலங்கையின் ஒலிம்பிக் கமிட்டி கடிதம் தர வேண்டும், மத்திய விளையாட்டு அமைச்சகம் முறையான அனுமதி கடிதம் தர வேண்டும் என்ற புதிய சிக்கல்கள் உருவாகின்றன, இதைத் தீர்த்து வைக்க போலியான முத்திரைகளை உருவாக்கி தாங்களே ஒலிம்பிக் கமிட்டி கடிதம் போல ஒன்றை உருவாக்கிக் கொள்கிறார்கள், இந்த கடிதமும் ஜெர்மனிய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்களுக்கு விசா கிடைக்கிறது
பயண ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன, எப்போது மாட்டிக் கொள்வோம் என்று தெரியாமல் தடுமாறுகிறார்கள், இந்தக் குழப்பம் விமானம் ஏறும்வரை நீடிக்கிறது, முடிவில் ஜெர்மனி போய் இறங்குகிறார்கள், அங்கே அவர்களை வரவேற்க ஆட்கள் தயராக இருக்கிறார்கள், ஜெர்மனிய விமான நிலையத்தில் இருந்தே ஒரு குழு தப்பியோட முயற்சிக்கிறது, ஆனால் அது தடுக்கபடுகிறது
அவர்கள் விளையாட்டுப் போட்டி நடக்கும் இடத்தருகே தங்கவைக்கபடுகிறார்கள், போட்டி துவங்குகிறது, கைபந்து போட்டியின் அரிச்சுவடி கூட அறியாத இலங்கை அணியும் ஜெர்மனிய அணியும் களமிறங்குகின்றன, அந்தப் போட்டி தான் உச்சபட்ச நகைச்சுவை, இலங்கை கைப்பந்து குழுவினர்கள் படும் அவஸ்தைகள் நம்மை சிரிப்பில் உருள வைக்கின்றன,
போட்டியை காணும் பார்வையாளர்கள் கேலி செய்து சிரிக்கிறார்கள், மூன்று நான்கு போட்டி விளையாடி முடிவில் ஒரேயொரு கோல் போடுகிறார்கள், இந்த ஒரு கோலிற்காக அவர்கள் ஆடும் கொண்டாட்டமிருக்கிறதே,  போதும் போதுமென இருக்கிறது, முடிவாக கைப்பந்து போட்டியில் தோற்றுப்போய் ஆட்டத்தில் இருந்து வெளியேற்றபடுகிறார்கள்.
அப்போது தான் இது ஒரு திருட்டுதனம் என்பதைப் போலீஸ் கண்டுபிடிக்கிறது, அவர்கள் தங்கியிருந்த அறைகளுக்கு வந்து தேடுவதற்குள் ஆளுக்கு ஒரு பக்கம் தப்பியோடுகிறார்கள், ஜெர்மனியில் இருந்து அவரவர்களுக்கு விருப்பமான ஊர்களுக்கு தப்பியோடி உலகின் கண்களில் இருந்து காணாமல் போய்விடுகிறார்கள், போலீஸ் மற்றும் நீதிமன்ற உத்தரவு எதுவும் அவர்களை ஒன்றும் செய்யமுடியவில்லை, கடைசிகாட்சியில் ஜெர்மனியில் இருந்து நான்கு பேர் லண்டன் போவது என்று முடிவு செய்து புறவழி நெடுஞ்சாலை ஒன்றில் காத்துக்கிடக்கிறார்கள், அவர்களது கனவுப்பயணம் துவங்குகிறது,  போலீஸ் பல ஆண்டுகாலமாக அவர்களை தேடிக் கொண்டேயிருக்கிறது, கண்டுபிடிக்க முடியவேயில்லை என்ற செய்தியோடு படம் நிறைவுறுகிறது
இது போன்ற உண்மை சம்பவம் ஒன்று 2004 இலங்கையில் நிஜமாக நடைபெற்றிருக்கிறது, அதைப் பற்றிய பத்திரிக்கை செய்தியை வாசித்த பசோலினி அதைப்படமாக்க முயன்றிருக்கிறார், அதன் விளைவே இந்த திரைப்படம்
இப்படம் இரண்டு முக்கிய விஷயங்களை முதன்மைபடுத்துகிறது, ஒன்று நாடுவிட்டு நாடு போய் சம்பாதிக்க நினைப்பவர்கள் படும்பாடுகளையும் அதற்காக அவர்கள் மேற்கொள்ளும் அத்தனை குறுக்குவழிகளையும் பற்றி பேசுகிறது, இது இலங்கைக்கு மட்டுமேயான சூழல் இல்லை, தமிழ்நாட்டில் இப்படி எவ்வளவோ பேர் முறையற்ற அனுமதி பெற்று வெளிநாடுகளில் வேலைக்கு போய் மாட்டிக் கொண்டு சிறைவாசம் புரிவது நடந்து கொண்டேயிருக்கிறது
இன்னொன்று விளையாட்டு வணிகமயமாகிப்போன சூழலைப் பற்றியது, விளையாட்டு இன்று முக்கியமான வணிகப்பொருள்களில் ஒன்று, அதனால் அறிமுகமேயில்லாத விளையாட்டுகள் திடீரென பிரபலம் ஆவதும் அதற்கான புதிய குழுக்கள் உருவாகி அது ஒரு நிறுவனம் போலாகிவிடுவதையும் படம் கேலி செய்கிறது
மச்சானின் எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவு மற்றும் காட்சிகளில் வெளிப்படும் யதார்த்தமான நகைச்சுவை அதற்கு மிகுந்த சிறப்பு சேர்கின்றன,  ஈரானிய திரைப்படங்களில் காணப்படுவது போன்ற யதார்த்தம்மும் கவித்துவமும் இணைந்த உருவாக்கம் இப்படத்திலும் காணப்படுகிறது, நடிகர்கள் அத்தனை பேரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள், லகான் பெரும்பொருட்செலவில் உருவாக்கபட்டது, இந்த படம் அப்படியான ஒன்றில்லை, மிக குறைவான பட்ஜெட்டில் இலங்கை மற்றும் ஜெர்மனியில் படமாக்கபட்டிருக்கிறது
கைபந்துக் குழுவை உருவாக்க மனோஜ் மற்றும் ஸ்டான்லி மேற்கொள்ளும் எத்தனங்கள், அதில் சேர்ந்து கொள்ளும் ஆட்களின் இயல்பு , இந்த பிரச்சனைகளுக்கு நடுவில் உள்ள வீட்டுப்பிரச்சனைகள், பொருளாதார சிக்கல்கள், ஏமாற்றங்கள், யுத்தநெருக்கடியான புறச்சூழல் யாவும் படத்தின் ஊடாக அழகாக விவரிக்கபடுகின்றன,
துல்லியமாக ஒரு டாகுமெண்டரி படம் போல கைப்பந்து குழுவின் உருவாக்கம் படமாக்கபட்டிருக்கிறது,
வாழ்க்கை நெருக்கடி மனிதர்களை எல்லா ஏமாற்றுதனத்திற்கும் துணிச்சலுக்கும் கொண்டு போய்விடுகிறது என்பதற்குச் சாட்சியே இப்படம், விளையாட்டைக் களமாக கொண்டு இப்படியும் ஒரு படத்தை உருவாக்க முடியும் என்பதே இதன் தனிச்சிறப்பு"

No comments:

Post a Comment